Monday 8 June 2015

சமணம் (2) – கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு!


உயிரின் பெருக்கமும் சுருக்கமும் பற்றிச் சென்ற பதிவில் கேட்டிருந்த கேள்விக்கான  சமணரின் விளக்கத்துடன் இப்பதிவைத் தொடர்வோம்.


உயிர் தான் ஏற்றுக் கொள்ளும் உடலுக்கேற்பப் பெருக்கமும் சுருக்கமும் அடைகிறது என்பதை விளக்கச் சமணர் ஓர் உவமையைக் கையாள்கின்றனர்.

“ஒரே விளக்கின் ஒளி எப்படி ஒரு குடத்துக்குள்ளும் ஒரு அறைக்குள்ளும் வெவ்வேறு அளவில் பரந்து பிரகாசிக்கிறதோ அதைப் போன்றதே சிற்றுடலின் உள்ளும் பெரிய உடலின் உள்ளும் இருக்கும் உயிர், அவ்வுடலின் அளவிற்கேற்பத் தன்னைப் பெருக்கியும் சுருக்கியும் கொள்கிறது ”

என்பதே அவர்களின் விளக்கம்.

சமணம் பற்றிய சென்ற பதிவில், பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களை இரண்டாகப் பிரித்து உயிர் உள்ளவை ( சீவன் ) என்றும் உயிரற்றவை ( அசீவன் ) என்றும் பகுத்துக் காண்பது சமணர் கொள்கையின் அடிப்படையுள் ஒன்று என்று பார்த்தோம்.

இப்பகுப்பு மிக எளிமையானது. ஆனால் இதில் சின்னச் சிக்கல் இருக்கிறது.

சமணர் கொள்கையின்படி இவ்வுலகில் முழுக்க முழுக்க உயிர் தன்மை மட்டுமே கொண்ட ஒரு பொருளும் கிடையாது. ( சித்து மட்டுமேயான ஒன்று இல்லை.)

முழுக்க முழுக்க  உயிர் இல்லாத சடப் பொருளும் கிடையாது. ( அசித்தென்று ஆவதும் இல்லை. )

நாம் காணும் உயிர்ப்பொருளில் எல்லாம் உயிரற்ற சடப்பொருளின் தன்மையும் இருக்கிறது.

ஆனால் அந்த உயிர்ப்பொருளில்,  உயிரற்றதன் கலப்புக் குறைவு. பெரும்பான்மை இயல்பு பற்றி நாம் அதனை உயிர்ப்பொருளின் கீழ் வகைப்படுத்துகிறோம்.

உயிரில்லை என்று நாம் பாகுபடுத்துகின்ற சடப்பொருளில் உயிர்ப்பொருளின் தன்மையும் இருக்கிறது. அதன் பெரும்பான்மை இயல்பு பற்றி அதனை உயிரற்றவற்றின்பால் படுத்துகிறோம்.

இங்கு நாம் உணர வேண்டியது முற்றிலும் உயிரற்ற சடப்பொருளோ அல்லது முற்றிலும் உயிர்த்தன்மை மட்டுமே கொண்ட சித்துப் பொருளோ உலகில்  இல்லை என்று சமணர் கருதுவதனையே!

சமணரின் கொள்கைப் படி, கல்லிலும் மண்ணிலும் மட்டுமல்ல காணும் எல்லாப் பொருளிலும்  உயிரின் அம்சம் உள்ளது.

இதை எளிய உதாரணம் மூலம் விளக்கலாம்.

தங்கத்தில் குறைந்த அளவு செம்பு கலந்திருந்தாலும் அதைத் தங்க நகை என்றுதானே கூறுகிறோம்.? செம்பு நகை என்று கூறுவதில்லை அல்லவா? அதைப்போலத்தால் எந்த இயல்பு ஒரு பொருளில் அதிகமாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் சமணம் அப்பொருள் சித்தா ( உயிரா ) அல்லது அசித்தா (சடமா) என்பதைப் பாகுபடுத்துகிறது.

சீவனின் ( உயிருள்ளதன் ) தன்மை சேதனம், அதாவது அறிவுள்ளது.

அசீவனின் ( உயிரற்றதன் ) தன்மை அசேதனம் அதாவது அறிவற்றது.

ஒரு உயிரைச் சுற்றி உள்ள சடப்பொருள்கள் யாவும் புற்கலம் எனப்படுகின்றன.

புற்கலம் என்பதற்கு இணைந்து ஒன்றாவதும் பிரிந்து வேறாவதும் என்று பொருள்.

புற்கலத்தின் இயல்பின் அடிப்படையில் அவை இரு நிலைகளில் தோன்றுகின்றன.

1)   ஒரு பருப்பொருள் பிரிந்து, பிரிந்து, பின் பிரிக்கவே முடியாத ஒன்றன் நிலைக்குப் போதல். ( இதனைச் சாதாரணர் புலன்களால் காணவோ உணரவோ முடியாது.)

2)   பிரிக்கமுடியாத ஒன்று, பலவாய்ச் சேர்ந்து திரண்டு ஒரு பருப்பொருளாய் ஆதல். ( இதுவே உயிர்கள் காணவும் உணரவும் கூடிய சடப்பொருட்கள். )

புற்கலத்தின் இந்தக் காணவும் உணரவும் கூடிய பருப்பொருள்  நிலையைச் சமணர் ஸ்கந்தங்கள் என்று அழைப்பர்.

ஸ்கந்தம் என்பது கூடி உருவானது என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

அவர்கள் கருத்துப்படி நாம் காணும் பொருள்கள் அனைத்தும் ஸ்கந்தங்களே!

இந்த அண்டத்தை அவர்கள் மகாஸ்கந்தம் என்று அழைக்கின்றனர்.

உலகம் தோன்றியது பற்றிய சமணரின் கருத்து என்ன…?

சீவன்களின் வீடுபேறாவது எது..?

கடவுளை ஏற்காத சமணர் யாரை வழிபடுகின்றனர்?

காண்போம்....காத்திருங்கள்!

( துணை நூல் மற்றும் பார்வைநூற் பட்டியல் தொடரின் இறுதியில் )

பட உதவி- நன்றி  https://encrypted-tbn1.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

55 comments:

  1. தமிழ் மணம் 1 பிறகு வருகிறேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      தங்களின் முதல் வருகைக்கு நன்றி!

      உண்மையில் எனக்கு முன்பே வந்துவிட்டீர்கள். :)

      நன்றி.

      Delete
  2. தொடர்கிறேன் சகோ
    தம 3

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு சமணரின் கொள்கைப் படி விளக்கிச் சொன்னாலும்
    புரியாத புதிர்தான். புதிருக்கு விடை இருக்கத்தானே செய்யும். புரியாததை புரிய வைக்கும் புது இடம்.

    நன்றி.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்!

      தங்களின் ஓய்விலும் தொல்லை செய்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. அடுத்த பதிவுக்காக....

    ReplyDelete
    Replies
    1. நானும்........

      நண்பரே!!

      நன்றி.

      Delete
  5. காத்திருக்கிறேன் நண்பரே
    தம+1

    ReplyDelete
  6. கேள்விகளை எழுப்பிய நீங்களே மறுமொழி கூறுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. மறுமொழிக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!

      Delete
  7. மேலும் அறியத் தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  8. இதெல்லாம் சிலரின் கற்பனை ஊற்றுபெருக்கோடியதால் ஏற்பட்ட பொருளில்லா சித்தாந்தங்கள் என்று நான் சொன்னால் கோபிக்கக் கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நான் ஏன் கோபிக்கப் போகிறேன்?.

      பதிவில் இருப்பது சமணரின் கருத்து.

      இது உங்களின் கருத்து.

      அவ்வளவுதானே...?

      கொள்கைகளைத் தெரிந்து கொள்ளும்போது இது சரி.... இது கற்பனை .....இது சரியில்லை....... என்ற எண்ணம் வருவது இயல்பானதுதான்.

      ஒவ்வொரு சமயங்களின் கொள்கைகளை விவரிக்கும் பதிவில் எல்லாம் எல்லார்க்கும் ஏற்புடையதாக இருக்காது என்பது இயல்பானதுதானே..?


      இப்பதிவுகளின் நோக்கம், பொதுவாக பள்ளி அளவில் மிகச் சொற்பமே அறிந்த ( சிலவற்றைப் பற்றி முற்றிலும் அறியாத ) சமயக் கொள்கைகளை நடுநிலையோடு பகிர்தல், அடுத்து அதன் மூலம் சில பழந் தமிழ் இலக்கியப் பார்வைகளை முன்வைத்தல், என்பதைத் தவிர, ஒரு பக்கம் நின்று வாதிடுவதோ, என் தனிப்பட்ட கருத்துக்களைச் இடைச் செருகுவதோ இதன் நோக்கமில்லை.

      இதன் மூலம் இதற்கு முன் அறியாத சிறு துணுக்கு அளவு செய்தியேனும் படிப்பவர்கள் அறிந்தால் அது குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சியே..!

      கற்றலில் பெரும்பாலும் இவை போன்ற மகிழ்ச்சித் தருணங்களைத் தேடுவது என் சுபாவம்.

      அதை எதிர்பார்த்துத் தொடர்வனவே என் பதிவுகள்.

      தங்களது கருத்துகளைத் தொடர்ந்து வரவேற்கிறேன்.

      நன்றி

      Delete
  9. இப்போது தோன்றுவது
    (எங்கள் வேலூருக்கு)
    வராது வந்த மாமணியே வணக்கம் வாழ்த்துகள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சிவா,

      வணக்கம். எனக்குப் பிடித்த சம்சாவை இழந்து விட்டேன் என்பதில் வருத்தம்தான்.

      வேலூர் வரும்பொழுது தங்களுக்குக் கண்டிப்பாய்ச் செலவு வைப்பேன்.

      பதிவுகளைத் தொடர்வதற்கு நன்றிகள்.

      Delete
  10. காத்திருக்கிறேன் ஆசானே,

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லையே பேராசிரியரே!

      நன்றி.

      Delete
  11. சமணம் கூறும் மனிதாபிமானத்தை எங்கே போய் தேடுவது என்று தெரியவில்லை ,சிங்களர்கள் சமணர்கள் என்பதால் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பகவானே..!

      இது நகைச்சுவைக்காய் இல்லையே?!

      சிங்களர்கள் பௌத்தர்கள் அல்லவா..?

      கொன்றால் பாவம்! தின்றால் போச்சு என்பதல்லவா அவர் கொள்கை.

      வேறேதும் உள்குத்து இல்லையே இதில் ! :)

      Delete
  12. கடவுளை ஏற்காத சமணர் யாரை வழிபடுகின்றனர்?--- அறிய -காத்திருக்கிறேன் நண்பரே...த.ம் 9

    ReplyDelete
    Replies
    1. தொடர்கின்றமைக்கு மிக்க நன்றி வலிப்போக்கரே!

      Delete
  13. வணக்கம்
    ஐயா

    பள்ளிக்கூடத்தில் ஒரு பாடம் படித்தது போல ஒரு உணர்வு நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  14. புது புது சிந்தனைகளை அறிகிறேன்... மிகவும் ரசிக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இது புதிய மொந்தையில் பழைய கள் டிடி சார்.

      மிகப் பழங்காலச் சிந்தனைகளே இவை.

      வருகைக்கும் ரசனைக்கும் வாக்கிற்கும் நன்றி !

      Delete
  15. சேதனம்..அசேதனம் இதெல்லாம் புதியதாக இருக்கிறது. அடுத்து வரும் பகிர்வுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சமண மரபில் பயில வழங்கப்படும் சொற்கள் அவை கவிஞரே!
      அறிவுள்ளது அறிவற்றது எனப் புரிந்து கொண்டால் போதும்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  16. இதுவரை அறியாத தகவல் !காத்திருக்கின்றேன் தங்களின் அடுத்த பகிர்வைக் காண .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  17. சமணம் என்பது பழந்திராவிடர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். ஒவ்வொரு விடயத்தையும் ஆழமாக ஆய்ந்தறிந்து உருவாக்கப்பட்டதே சமணம். கல்லுக்கும் மண்ணுக்கும் உயிர் உண்டு எனச் சொன்னால் சாமான்யர்கள் பலரால் விளங்கிக் கொள்ள முடியாது. ஆனால் அது தான் உண்மை. உயிர் என்றால் என்ன என்ற புரிதலை ஆழமாக அறிந்தால் மட்டுமே இதை விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் ஒவ்வொரு அணுக் கந்தத்துக்குள்ளும் அசைவும், ஆற்றலும், வளர்ச்சியும், உருமாற்றமும் உண்டு. ஆனால் மற்ற உயிர்ப் பொருட்களைப் போன்று அவற்றில் இல்லை. அதனால் சமணம் சொல்வது சரிதான். ஒவ்வொரு உயிர்ப் பொருட்களுக்குள்ளும் அடிப்படையில் உயிரற்ற பொருட்கள் கலந்துள்ளன. உயிரற்றப் பொருட்களுக்கு உள்ளும் உயிர்ப் பொருளின் ஆற்றலும் உள்ளன. நல்ல பதிவு தொடர்ந்து எழுந்துங்கள் சகா !

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் பதிவின் மையத்தைப் பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. விரிவான ஆய்வு! அனத்தையும் உள் வாங்கும் சக்தி எனக்கில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தாங்கள் வந்து கருத்திட்டுச் சென்றமையே மிக்க மகிழ்வுதான்.

      தொடர்கின்றமைக்கு நன்றிகள்.

      Delete
  19. காத்திருக்கிறேன்

    ReplyDelete
  20. வணக்கம் என் ஆசானே,
    சமணம் சார்ந்த கொள்கைகளில் அனுவிரதம் குணவிரதம், சிகிச்சை விரதம் என்று,
    பிறருக்குத் துன்பம் தருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அனுவிரதம் பெசுகிறது,
    மனத்தினால் நோகுமாறு சாபம் இடுதல் எதைக் குறிக்கிறது.
    சிலப்பதிகாரத்தில்,
    ” குறுநீர் இட்ட குவளை அம்போதோடு
    பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
    நெறிசெல் வருந்ததும் நீர் அஞர் எய்தி
    அறியாது அடி ஆங்கு இருதலும் கூடும்’‘
    உழவர்கள் வரப்புகளில் அள்ளிவிட்ட குவளை மலர்களில் தேன் உண்ண வண்டுகள் மொய்த்திருக்கும். இவற்றின் மேல் கால் வைத்தால் வண்டுகள் இறந்து போகும். உயிர் கொலை நேரிடும்.
    சரி வாய்க்கால் வழி போகலாம் என்றால் வாய்க்காலில் நண்டு, நத்தை காலால் நசுங்கித் துன்புறும் என்று சொல்லப்படுகிறது
    ஆனால் கவுந்தியடிகள்
    எள்ளுநர் போலும் என்பூங் கோதையை
    முள்ளுடை காட்டில் துளரி ஆகுக
    என சாபம் இடுகிறார்,
    சமணத்திற்கு ஒவ்வாத ஒன்று இது, மனதினால் துன்புற வைக்கும் கவுந்தியின் செயல் எந்தச் சமணத்தின் கோட்பாடு,
    காத்திருக்கிறேன்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியரே,

      வணக்கம். இப்படி அறிவினாவை எழுப்பி அறியாத அடியேனைச் சோதித்தல் தகுமா..?

      எனதிந்தப் பதிவுகளின் நோக்கம், தொல் இந்தியச் சமயங்கள் பற்றிப் பரவலாகத் தெரிந்திராத கொள்கைகளைத் தருதல். அனைவர்க்குமான ஒரு எளிய அறிமுகம், அது தமிழிலக்கியங்களில் சிற்சில இடங்களில் பயில வந்திருப்பதைக் காட்டுதல் என்பதாக அமைந்தது.

      இதில் ஆழங்கால் பட்ட தங்களைப் போன்றவர்கள் வந்து கருத்திடுவதும் அறிந்த செய்திகளை அறியத் தருவதும் நானுற்ற பேறு. அதற்காக இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன்..?

      சமணம் பற்றி மட்டுமல்ல, பண்டைய இலக்கியங்கள் பேசும் கொள்கைகளைப் பற்றி அறிய ஆர்வம் இருக்கும் அளவிற்கு எனக்கு அறியக் கூடவில்லை. விளக்கம் தருபவர்களைக் காணக் கிடையாமை. சரியான பார்வை நூல்கள் இன்மை. எல்லாவற்றிற்கும் மேலாய் என் முயற்சி இன்மை என்றெல்லாம் பல குறைகளைக் கொண்டிருக்கிறேன் நான்.

      நீங்கள் கேட்கும் பெரு முரண்களில் அன்று ஆகச்சிறிய விடயங்களிலேயே ஐயம் அகற்றமுடியா அறிவின் போதாமைகள் நிறைய உண்டு என்னிடம். அது சாகும் மட்டும் இருக்கும்.

      சரி …!

      நீங்கள் சொன்ன இந்த விரதங்கள்…,
      அதற்குமுன் சமணம் வீடுபேற்றை அடைய உதவும் கருவிகளாகக் கொள்வன மூன்றுள.

      அவை,

      நற்காட்சி ( சம்யக் தரிசனம் )

      நல்லறிவு ( சம்யக் ஞானம் )

      நல்லொழுக்கம் ( சம்யக் சாரித்திரம் ) என்பன.

      இவை திரிரத்தினங்கள் எனப் பள்ளியில் படித்து எழுதியது இதைத் தட்டச்சும்போது என் நினைவிற்கு வருகிறது. என் ஆசிரியர் திரு.லூர்து சாமி அவர்கள் இவ்விடைக்கு ஒன்றரை மதிப்பெண்கள் இட்டிருந்தார். இது இரு மதிப்பெண் வினா. ( அரை மதிப்பெண்கள் குறைந்ததன் காரணம் கேட்கச் சென்று அறை வாங்கியதுதான் மிச்சம் :) )

      இம்மூன்றனுள் முக்கியமானது நல்லொழுக்கம் ஆகும். அதனை அடையவே நீங்கள் சொன்ன அணு விரதம், சிகிச்சை விரதம் குணவிரதம் பயன்படுகிறது.

      நீங்கள் சொன்ன இம்மூன்றும் இல்லறத்தார்க்கு உரிய விரதங்கள்.

      கவுந்தியடிகள் துறவி.

      அவருக்குரியது மகாவிரதம்.

      அணு விரதம் முதலிய மூன்றும் சமணர்களில் இல்லறத்தவர்களுக்கு உரியது என்பதால் அது சாதராணமானது.

      மகாவிரதம் என்பது துறவோர்க்கு உரியது என்பதால் அது பின்பற்றக் கடினமானது.

      இல்லறத்தார்க்கு உரிய விரதங்களுள் முதலாவதாகிய அணுவிரதம் ஐந்தாகப் பகுக்கப்படுகிறது.

      அவை,

      1) கொல்லாமை

      2) பொய்யாமை

      3) திருடாமை

      4) பிறன் மனை நோக்காமை

      5) மிகு பொருள் சேர்க்க விரும்பாமை
      என்பன.

      மகாவிரதர்க்கும் அணுவிரதர்க்கும் கொல்லாமை பொதுவானது.

      அணுவிரதர், கொல்லாமை என்பதை அறிந்து எவ்வுயிர்க்கும் ஊறு செய்யாமை என்பதனோடு நிறுத்த, மகாவிரதர் அறியாமல் கூட எவ்வுயிர்க்கும் தீங்கு செய்து விடக் கூடாது என்ற கொள்கையுடன் இருப்பர்,

      சமணத் துறவிகளின் வசிப்பிடங்கள் ( பள்ளிகள் ) மலைமேல் இருந்ததற்கு மண்ணில் இருக்கும் சிற்றுயிர்க்குக் கூட அறியாது ஊறு செய்தல் ஆகாது என்பதே காரணம்.
      மகாவிரதிகளைப் போல இல்லறத்தார் இந்த அளவு கடுமையான நெறி நிற்க முடியாது.

      மலைப்பகுதி அல்லாத இடங்களில் கூட, உறியைக் கட்டி அவ்வுறியில் வசித்தமையால் ‘உறியிற் சமணர்’ என அவர்கள் அழைக்கப்பட்டதை இலக்கியங்கள் காட்டுகின்றன.

      அன்றியும் காற்றில் இருந்து நுண்ணுயிர்கள் மூச்சோடு உட்சென்று இறந்துவிடலாகாது என்று மூக்கைத் துணி கொண்டு மூடி இருப்பர் என்றும் மயிர்க்கால்கள் சிற்றுயிர்களுக்கு இடமாகி தாம் அறியாமல் அவை கொல்லப்படக் கூடாது என்பதற்காகத் தங்கள் உடலின் ரோமங்களை ஒவ்வொன்றாய் முற்றிலும் பிடுங்கி எடுப்பர் என்றும் இவர்களைப் பற்றிப் பழம் நூல்கள் கூறுகின்றன.
      பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

      அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
      .......................................................................................தொடர்கிறேன்.

      Delete
    2. இதை இங்கு நிறுத்தி உங்களின் சிலம்பு காட்டும், “ வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும் ” பகுதிக்கு வருகிறேன்.

      (என்றேனும் ஒரு மாறுதலுக்காக பதிவிட வைத்திருந்த சிலப்பதிகாரச் செய்தி இது வேறொரு கோணத்தில்.)

      சமணம் பற்றிய முதற்பகுதியில், பிற உயிர்களைக் கொல்லாமை மட்டும் அல்ல அகிம்சை - அது பிற உயிர்களுக்கு இன்னல் நேரும் போது அதைக் காத்தலும் என்பதுமாகவே சமணர் கொள்கை அமைந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறேன்.
      இங்குக் கோவலன் கண்ணகியுடன் வரும கவுந்தியடிகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என வினவும் பரத்தையும், அவளுடன் இருந்தோனுக்கும் கவுந்தியடிகள், “ இவர்கள் என் மக்கள் ” என்று பதில் கூற, அவர்களோ,

      “இருவரும் உம் மக்கள் என்றால், உடன் பிறந்தாருக்குள் திருமணம் செய்து கொள்வதுதான் உங்கள் வழக்கமோ? ” என்கிறார்கள்.

      “ தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
      காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க ”

      அந்நடுக்கம் காணப் பொறாமல்தான் கவுந்தி சினக்கிறார்.

      சரி.

      துறந்தவர் சினக்கலாமோ சாபமிடலாமோ என்பதே உங்களின் கேள்வி எனின்,

      “ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
      மெண்ணிற் றவத்தான் வரும் ” ( குறள் – 264 )

      தவத்தின் பயன், “அறத்திற்குப் பகையாய் அழிவு செய்யும் வலிமையானவர்களைச் சினந்து அழித்து, அறத்தையே விரும்பும் மெலியவர்களைக் காத்தல் ” என்பதாய் இதற்குப் பதில் கூறிவிடுகிறார் வள்ளுவர்.

      எனவே தவவாழ்வு வாழும் துறவிகள் சினக்க வேண்டியதற்குச் சினக்கத்தான் வேண்டியிருக்கிறது. அது ஒருபோதும் அவர்களின் சுயநலனிற்கானதன்று.
      இங்குக் கவுந்தி அடிகள் செய்வது கூட உயிர்க்கொலை அல்ல. குயுக்தி கொண்ட அம்மனிதரை அவ்வியல்புடைய விலங்காய் போ என்பதுதான் அவர் செய்தது.
      ஒருவேளை அவர்களை அவர் அழித்திருந்தால் நிச்சயம் அது சமண அறத்திற்குப் பெருங் கேடாய்த்தான் முடிந்திருக்கும்.

      பேராசிரியரே…,

      மற்றபடி என்னை நீங்கள் இப்படிச் சிக்கலில் மாட்டிவிட்டால், இந்த மாதிரி மெழுகலான பதிலைத்தான் தரவேண்டி இருக்கும். :)

      தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    3. முதற்பகுதியில்,
      “அணு விரதம் முதலிய மூன்றும் சமணர்களில் இல்லறத்தவர்களுக்கு உரியது என்பதால் அது சாதராணமானது.“
      என்றிருப்பதில்

      சாதராணமானது என்பதைச் சாதாரணமானது எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
      தவறினுக்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
    4. ஆசான் அவர்களுக்கு,
      என் மீள் வருகையைப் பொறுத்தாற்றுங்கள்,
      பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

      அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
      இது என்ன நியாயம்?
      சரி இதை இதோடு முடிக்கிறேன்.
      அடுத்த பதிவில் பார்ப்போம்.
      நன்றி.

      Delete
    5. பேராசிரியரே உங்கள் மீள் வருகைக்கு எப்போதும் போல வரவேற்பு.

      தங்களின் முந்தைய கேள்விக்கான விடையில் திருப்தி ஏற்பட்டதா..?
      எனில் மகிழ்ச்சி.

      //பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

      அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
      இது என்ன நியாயம்?//

      நியாயம் அநியாயம் எல்லாம் தனிப்பட்டவரின் மனப்பாங்கினோடும் அவர் சார்ந்த சமூகச் சமயக் கொள்கைகளோடும் தொடர்புடையன அல்லவா பேராசிரியரே..?

      கொல்லாமை கூடாது, புலால் ஆகாது என்பது சமண நெறி.

      கொல்லக் கூடாது ஆனால் கொன்றதைத் தின்னலாம் என்னும் பௌத்தம்.

      அவரவர்க்கும் அவரவருடையதான நியாயங்கள்.

      ஒரு தரப்பாரின் நியாயம் இன்னொரு தரப்பாருக்கு அநியாயமாய்த் தோன்றுதல் உலகத்தின் இயற்கை.

      அவர்கள் தம்முயிரைப் போக்குதலைக் குற்றமெனக் கருதார்.

      அது அவர்கள் கொண்ட நியாயம் அவ்வளவே.

      அது சரியா தவறா என்பதைப் பற்றி என் கருத்தை நான் சொல்லவே இல்லை.

      அவர்கள் கொள்கை இது அவ்வளவுதான்.

      ஆனால் ஒன்று,

      புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறத்தலையும், நவகண்டத்தையும் நீங்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காண முடியும். அப்படி ஒரு மரபு சமூகத்தில் இருந்தது என்று அதைப் பதிவு செய்யும் போது அப்படிப் பதிவு செய்தவர்களை நோக்கி இது நியாயமா என்று யாரும் கேட்பதில்லை. :))

      அருள்கூர்ந்து இப்பதிவினையும் அதுபோல எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  21. முற்றிலும் உயிருள்ள பொருளோ அல்லது உயிரற்ற பொருளோ இவ்வுலகில் இல்லை என்று சமணர்கள் கூறுவதைப் புரிந்து கொண்டேன். ஆனால் சேதனம், அசேதனம், புற்கலம் போன்ற சொற்கள் பயமுறுத்துகின்றன. பழைய தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள சமணர்களின் கொள்கைகள் பற்றி விலாவாரியாகத் தெரிந்து கொண்டால் தான் முடியுமா? மனதில் பட்டதைச் சொல்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம் சகோ! பாடம் மிகவும் போரடிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      முதலில் உங்களின் வெளிப்படையான கருத்திற்கு நன்றி.

      தமிழ் இலக்கியத்தினைப் புரிந்து கொள்ளச் சமணர்களின் கொள்கைகளைப் பற்றி நிச்சயம் விலாவரியாகத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

      மிக மிகச் சிறிய அளவிற்கு இவ்வறிவு உதவும்.

      பொதுவான என்னுடைய தேடல், ஒன்றிலிருந்து இன்னொன்றாக, அதிலிருந்து வேறொன்றாக நீள்வன. இப்படி வெகுதூரம் சென்று சென்று, ஓரிடத்தில் நின்று திருமபி எதற்காக இதைத் தேட ஆரம்பித்தோம் என்று பலமுறை மண்டையை உடைத்துக் கொண்டது உண்டு.

      அதனால் பலவிடயங்களை அறிந்து கொள்ளும் நன்மை உண்டென்பதால், அது ஒரு சுவாரசியமான விளையாட்டைப் போல.

      இந்தச் சமயங்கள் பற்றிய ஆராய்ச்சியைத் திருக்குறள்தான் எனக்குத் தொடங்கி வைத்தது.

      அதன் உரையாசிரியர் கையாளும் சில பதங்கள் எனக்குப் புரியவில்லை.

      அவற்றிற்கு விளக்கங்களும் இல்லை. அல்லது விளக்கங்கள் என இருப்பதைக் காண இன்னும் குழப்பமே மிஞ்சியது.

      காப்பியங்கள், அதன் உரைகள் இதுபோன்ற சொல்லாடல்கள் பலவற்றைப் போகிற போக்கில் காட்டிச் செல்லும்.

      உங்களை மிரட்டும் , புற்கலம், சேதனம் போன்ற சொற்களை நான் இங்குத் தருவதன் நோக்கம் இவற்றைப் பண்டைய உரைகளில் காணும் போது தேவைப்படும் புரிதல் எளிமைக்காகவே.

      மற்றபடி, இப்பதிவுகள் சுவாரசியமானவைதான்.

      அது போரடிப்பதற்குக் காரணம், அதனைச் சுவைபட எனக்குச் சொல்லத் தெரியாமையே.

      இணையத்து இருக்கக் கிடைக்கும் குறைந்த நேரத்தில் முடிந்த மட்டும் சுவைபடச் சொல்ல இனி என்னால் முடிந்த மட்டும் முயல்கிறேன்.

      பொதுவாக தொடர்பதிவுகளின் இடையிடையே வேறுவேறு பதிவுகளையும்
      இட்டுச் செல்வது, ஒரு பொருண்மையை விரும்பாதார் வேறொன்றைத் தொட ஏதுவாகும் என்பதால் தான்.

      தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      தங்களின் மனம் படும் கருத்தை எப்போதும் வரவேற்கிறேன்.

      Delete
    2. தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள சமண சமயக் கருத்துக்கள் அதிகம் தேவைப்படாது என்றறிந்து நிம்மதி. எதையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், தொடர்ச்சியான தேடலும் தான் எல்லா விஷயங்களிலும் உங்களை ஆர்வம் கொள்ளச் செய்கின்றன. அதனால் தான் பல விஷயங்களில் உங்கள் அறிவு ஆழமாய் உள்ளது. நீங்கள் சுவைபடவும் எளிமையாகவும் தான் விளக்குகிறீர்கள். ஆனால் என் மண்டைக்குத் தான் சமயக்கருத்துக்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமோ பொறுமையோ இல்லை. நீண்ட விளக்கத்துக்கு நன்றி சகோ!

      Delete
  22. உயிர்ப் பொருட்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் உயிரற்ற தன்மையும், உயிரற்ற பொருட்கள் எல்லாவற்றிலும் உயிர்த்தன்மை கொஞ்சமும் இருக்கிறது என்றால், அஃது எப்படி? புரியவில்லையே! அடுத்த பதிவில் இதற்குக் கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சற்றுச் சிக்கல்தான் ஐயா.
      முயல்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  23. இலக்கணம் மட்டுமல்லாமல் சமணம் போன்ற, சுலபமாக விளக்க இயலாத கோட்பாடுகளைக்கூட முக எளிமையாக விளக்கும் உங்கள் திறமை ஆச்சரியம் !

    தங்க உதாரணம் எளிமையான, அருமையான உதாரணம் !...

    " எது இருந்ததோ அது அப்படியே இருக்கிறது... எது மறைந்ததோ அது மறைந்துவிட்டது ! " என்ற ஒஷோவின் வரிகள் ஞாபகம் வருகிறது...

    " இப்பதிவுகளின் நோக்கம், பொதுவாக பள்ளி அளவில் மிகச் சொற்பமே அறிந்த ( சிலவற்றைப் பற்றி முற்றிலும் அறியாத ) சமயக் கொள்கைகளை நடுநிலையோடு பகிர்தல், அடுத்து அதன் மூலம் சில பழந் தமிழ் இலக்கியப் பார்வைகளை முன்வைத்தல், என்பதைத் தவிர, ஒரு பக்கம் நின்று வாதிடுவதோ, என் தனிப்பட்ட கருத்துக்களைச் இடைச் செருகுவதோ இதன் நோக்கமில்லை. "

    தொடருங்கள் சகோதரரே...

    நீலன் அவர்கள் குறிப்பிட்டது போல, ஒவ்வொரு அணுவுக்கும் இயக்கம் உண்டு என்பதை புரிந்துக்கொண்டால், சமணத்தின் கூற்றும் புரியும்...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  24. அட இதை நான் எப்படி தவறவிட்டேன் ம்..ம் சமணம் பற்றி நான் அறிந்தது ஒருதுளியும் கூட இருக்குமோ தெரியலை ம்..ம் அவர்கள் எண்ணங்கள் கோட்பாடுகளை அருமையாக இரசிக்கும் படியே விளக்கி யுள்ளீர்கள் எப்போதும் போல். இன்னும் சுவாரஸ்யமாக எழுதினால் மகிழ்ச்சி தானே அனைவர்க்கும். சர்க்கரை பந்தலில தேன் மாரி பொழிந்தது போல் இருக்கும் அல்லவா ஹா ஹா மீண்டும் வருகிறேன் இன்னும் வாசிக்கணும். ஆமா சமணம் இன்னும் உலவுகிறதா அல்லது அடியோடு அழிந்து விட்டதா. இது எனக்கு நீண்ட நாளாக என்னுள் எழுந்த கேள்வி. பதில் தருவீர்களா?
    மிக்க நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
  25. வணக்கம் பாவலரே !

    சமணம் என்னும் ஒரே வார்த்தையைத் தவிர வேறேதும் நான் கேள்விப்படவில்லை அவை பற்றிப் படிக்கவும் இல்லை எங்கள் பாடத்திட்டத்திலோ பள்ளியிலோ அவை இருந்ததில்லை ,,,எல்லாம் இங்கு காண்கிறேன் பகிர்வுக்கு நன்றி ..தொடர்கிறேன் தொடர வாழ்த்துக்கள்

    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    ReplyDelete
  26. தொடரட்டும் அரும்பணி
    தம +

    ReplyDelete
  27. அனைத்தும் அணுக்களால் ஆனது என்பது போலவா?
    அண்ணா, எதைப் பற்றியும் ஆழமாக அறிந்து கொள்ளத் துடித்து அதைப் பகிரும் உங்களுக்கு வந்தனங்கள். நீங்கள் சொல்வது போல, ஒன்று மற்றொன்றிற்கு இழுத்துச் செல்லும், சில நேரங்களில் தொலைந்தும் விடுவோம். ஆனால் அதை விடாமல் பற்றித் தெளிவாக அறிந்து நீங்கள் பகிர்வது பெரிய விசயம் அண்ணா.
    நீங்கள் என் அப்பாவைப் போல :) அவங்க மாதிரி நான் இருந்திருந்தா எங்கோ போயிருக்கலாம் :-)

    ReplyDelete

  28. வணக்கம்!

    போற்றும் சமணத்தைச் சாற்றும் பதிவிதனால்
    ஊற்றென ஊறும் உவப்பு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
  29. சமணம் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த எனக்கு, தங்களின் இந்த தொடர் மூலம், அவர்களைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த பகுதியையும் சென்று அவர்கள் யாரை வணங்குகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete